புதன், 7 செப்டம்பர், 2011

71. திருக்குறள் என்னும் அறிவன் நூல்.



மூவகைக் காலங்களையும் அறிந்தவன்
அறிவன் என்ப்படுவான்.
அந்த மூவகைகள் பலவிதப்படும்.
அவற்றுள் ஒன்றான
இறந்த காலம் – நிகழ் காலம் – எதிர் காலம்
என்னும் மூவகையை அறிவன் அறிந்த பாங்கினை
முந்தின கட்டுரையில் கண்டோம்.

அந்த வகையில் கணியன் பூங்குன்றனாரும்,
திருவள்ளுவரும் அடங்குவர்.
இவர்களைத் தவிர மற்றொரு சங்கப் புலவரும்
அடையாளம் காட்டப்பட்டுள்ளார்.
அவர் மாமூலனார்.

நாம் முன்பு மோரியர் பற்றி மேற்கோளிட்ட பாடல்களில்
நந்தர்கள் பற்றிய பாடல்
மாமூலனார் எழுதியதே. (பகுதி 37)
அவரது பாடல்களின் மூலம் பல வரலாற்றுச் செய்திகள் தெரிகின்றன.
அவரை ஒரு அறிவன் என்று தொல்காப்பிய உரையில்
நச்சினார்க்கினியர் சொல்கிறார்.
ஆனால் அதை பார்ப்பன வாகையை விளக்கும் போது சொல்கிறார்.


பொருளதிகார 75 ஆம் சூத்திர உரையில்,
யோகிகளாய்,
உபாயங்களால் முக்காலமும் உணர்ந்த
மாமூலர் முதலியோர்
அறிவன் தேயத்து அனை நிலை வகையரே ஆவர்
என்கிறார்.
அதாவது பார்ப்பன வர்ணத்தில் பிறந்தவராக இருந்தாலும்,
யோகியாக இருந்து,
முக்காலமும் உணரும் சக்தி படைத்தவராக இருந்ததால்,
அவர் அறிவன் வகையைச் சேர்ந்தவராகக் கொள்ள வேண்டும் என்கிறார்.
இதன் மூலம் பிறப்பு எப்படி இருந்தாலும்,
ஒருவரது இயல்பு மற்றும் தொழில் அடிப்படையில்தான்
வர்ணங்களும், ஏழு வகைகளும் செய்துள்ளனர் என்று தெரிகிறது.


அந்த மாமூலனார் என்ன சொல்கிறார் என்று பாருங்கள்.
திருவள்ளுவரைப் பற்றி அவர் எழுதியுள்ள பாடல்
திருவள்ளு மாலையில் தொகுக்கப்பட்டுள்ளது.
அதில் அவர் வள்ளுவரைப் பற்றி இவ்வாறு சொல்லியுள்ளார்.


அறம்பொரு ளின்பம்வீ டென்னும்அந் நான்கின்
திறம்தெரிந்து செப்பிய தேவைமறந்தேயும்
வள்ளுவ னென்பானோர் பேதை அவன்சொல்
கொள்ளா ரறிவுடை யார்.”


இதன் பொருள்:-
அறம், பொருள், இன்பம் வீடு என்னும் நான்கயும் அறிந்து
உலகத்தாருக்குச் சொல்லிய தேவன் அவன்.
அவனை மறந்து கூட வள்ளுவன்
என்று ஒருவன் சொன்னான் என்றால்
அவன் அறிவற்றவன் ஆவான்.
அறிவுடையார் அவனது சொல்லைக் கேட்க மாட்டார்கள்


மாமூலர் பார்ப்பனாராகப் பிறந்தாலும்,
அவரது இயல்பால் அறிவன் என்று
அழைக்கப்படுதலே சிறந்தது என்கிறார் நச்சினார்க்கினியார்.


ஆனால் மாமூலனாரோ,
வள்ளுவனானஅதாவது அறிவரான திருவள்ளுவரை,
வள்ளுவர் என்று சொல்வது அறிவு கெட்டத்தனமானது.
அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கையும்
நன்குக் கற்றுத் தெரிந்து கொண்டது மட்டுமல்லாமல்
அவற்றைக் குறள் வாயிலாக உலகுக்கும் சொன்னதால்
அவர் தெய்வம்,
அவரைத் தேவன் என்றே அழையுங்கள் என்கிறார்.


பார்ப்பன்ன் அறிவனாகிறான்,
அறிவன் தேவனாகிறான்.
இப்படி இயல்பும், வாழும் முறை குறித்தும்தான்
அடையாளப் பெயர் ஏற்பட்டிருக்கிறது.


மாமூலர் சொல்வதில் கவனிக்க வேண்டியது
அறம், பொருள், இன்பம், வீடு என்னும் மூன்றும்
சமஸ்க்ருதத்தில் புருஷார்த்தங்கள் எனப்படுபவை.
அவை வேத வழியில் வாழ்பவர்கள்
பின்பற்றும் வாழ்க்கையியல் ஆகும்.
அந்த வாழ்க்கையியலைப் பின்பற்றாதவர்கள் மிலேச்சர்கள்.
அவர்கள் தஸ்யூக்கள்
(அ-யஜ்வா என்பதைப் பற்றி பகுதி 29 இல் எழுதியுள்ளதைப் படிக்கவும்)
இமயம் முதல் குமரி வரை அனைத்து மக்களும்
இந்த 4 புருஷார்த்தங்களாலான
வேத வாழ்க்கையை வாழ்ந்தவர்கள்.


அவற்றைத்தான் திருக்குறள் தேவனார்
முப்பாலில் தந்துள்ளார்.
(மாமூலர் சொன்னதைப் படித்த பிறகு,
திருவள்ளுவர் என்று சொல்ல எனக்குத் துணியவில்லை.
அவரை திருக்குறள் தேவனார்
என்றே இனி இந்தத் தொடரில் குறிப்பிட விரும்புகிறேன்)




அந்த முப்பாலையும் ‘அதிகாரங்களின்’ கீழ் வகுத்துள்ளார்.
அதிகாரம் என்பது சமஸ்க்ருத பதம்.
மூன்று பகுதிகளுக்குப் ‘பால்’ என்ற தமிழ்ப் பதம் இட்டவர், 
அவற்றின் பகுப்பை, ’அதிகாரம்’ என்னும் சமஸ்க்ருதப் பதத்தால் 
ஏன் குறித்தார்?
அதிகாரம் என்பது தமிழ் - சமஸ்க்ருதம் ஆகிய இரண்டுக்கும்
பொதுவான சொல்.
அதிகாரம் என்றால் ஆளுமை செய்தல் என்று பொருள்.

சமஸ்க்ருதத்தில் அதிகாரம் என்ற சொல்லுக்கு
ஆழ்ந்த கருத்துக்கள உள்ளன.
அந்தக் கருத்துக்களின் 
அடிப்படையில்
ஒரு காரணத்துடன் தான் 
அந்த சொல்லத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று தெரிகிறது. 

அதிகாரம் என்பது
நிராபேக்ஷ அதிகாரம் என்றும்
யதோதிஷ்ட அதிகாரம் என்றும் இரணடு வகையாகப் பிரியும்.



நிராபேக்ஷ அதிகாரம் என்றால் ஒரு அரசனோ அல்லது ஆள்பவனோ
தன்னுடைய நேரடியான அதிகாரத்தால்
மக்களை ஒரு குறிப்பிட்ட வழியில் நடக்கச் செய்தல் என்று பொருள்.
அவன் ஆளுகைப்படி நடக்கவில்லை என்றால்
அவன் தண்டனை விதிப்பான்.


யதோதிஷ்ட அதிகாரம் என்பதில்
ஆளுமை என்பது தானாகவே பரவக்கூடியது.
ஆள்பவன் சொல்லி அது செய்யப்படுவதல்ல.
அதன்படி நடக்காமல் இருப்பதே
அதற்கான தண்டனைக்கு வழி வகுக்கும்.
இதுவே ஊழ் ஆகும். 

இதையே
‘“செய்வினை வழித்தாய் உயிர் செல்லும் என்பது
பொய்யில் உரைத்தோர் பொருள் உரை’
என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. (வரம்தரு காதை – வரிகள் 167 & 168)





சிலப்பதிகாரம் என்ற பெயரைப் பாருங்கள்.
சிலம்பின் அதிகாரம்!

சிலம்பின் காரணமாக உண்டான கதை,
யதோதிஷ்ட அதிகாரமாக மக்களை
ஆளுகிறது.
அதை எழுதியவர் தவ வாழ்க்கை மேற்கொண்ட தாபதர்.
அறிவர்களும், தாபதர்களும்
’அதிகாரம்’ என்னும் தொனியில் மக்களை வழிப்படுத்திய
இந்த நாட்டில்,
ஆரியத் திணிப்பு என்பது நடக்க முடியுமா?

இவர்கள் பரப்பின கொள்கையே
ஆரியத் திணிப்பால் ஏற்பட்டது என்று சொன்னால்,
அப்படிப்பட்ட திணிப்பு நல்லதுதான்!



திருக்குறள் யதோதிஷ்ட அதிகாரம் கொண்டது.
அதில் சொல்லப்பட்ட கருத்துக்கள் மக்களை ஈர்க்கவே,
மக்கள் அதற்குக் கட்டுப்படுவர்.
அந்தக் கருத்துக்களின் சிறப்பால்
திருக்குறளும் தானாகவே
மக்களிடையே ஆட்சி செய்யும். 
இதன் காரணமாக திருக்குறள் தேவனார்
அதிகாரம் என்ற பெயரில்
ஞான மார்க்கத்துக்குரிய எண்ணான 108 எண் கொண்ட
அதிகாரங்களின் கீழ்
அறம், பொருள் சார்ந்த முக்கியக் கருத்துக்களை,
குறளனான வாமனன், தனது சிறு அடியால்
எப்படி மூவுலகத்தையும் அளந்தானோ,
அவ்வாறே
மூன்று புருஷார்த்தங்களையும்
அளவிட்டுள்ளார்.


இதெல்லாம் கிருஸ்துவ சீடராக இருந்து
அவர் எழுதினார் என்று மிலேச்சர்கள் சொல்வார்கள்.
திராவிடவாதிகள் கேட்டுக் கொள்வார்கள்.

அப்படிச் சொல்லும் நூல்களுக்கு
முன்னுரையும் எழுதிக் கொடுப்பார்கள். 

இதுதான் இவர்களுடைய தமிழ் பக்தி! 



திருக்குறளில் உள்ள பல சொற்களும்,
தமிழுக்கும், சமஸ்க்ருதத்துக்கும் பொதுவான சொற்கள்.

தானம், தவம் இரண்டும் தங்கா வியனுலகம் என்றாரே,
அந்தத் தானமும், தவமும், ஊழ்வலியை வெல்ல உதவுபவை.
அவற்றுக்குச் சரியான தமிழ்ச் சொற்கள் கிடையாது.
அப்படி கிடைக்காத சொற்களை,
நம் முன்னோர் அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளனர்.


ஒரே மூலத்திலிருந்து வந்த மக்களால்,
மதுரத் தமிழில் உரையாடி,
சமஸ்க்ருத மொழியில் ஞானத்தைக் கரைத்துக் குடித்த பாங்கினை,
திருக்குறள் தேவனார் உட்பட பல தமிழ்ச் சான்றோரிடம்
அவர்கள் பாடல்கள் வாயிலாக நாம் கண்டுள்ளோம்.




அவற்றை முப்பாலாகத் திருக்குறள் தேவனார்  பாடியுள்ளார்.
இந்த மூன்றிலும் ஒருவன் சிறப்பாக வாழ்ந்தான் என்றால்
அவனுக்கு வீடு பேறு நிச்சயம்.
அதனால் வீடு பற்றித் தனியாகப் பகுப்பு இல்லை.
இந்தக் கருத்தை ஆரியர்கள் திணித்து,
வள்ளூவர் ஏற்றுக் கொண்டாரா?



திருக்குறள் என்று மட்டுமல்ல, புற நானூற்றையே எடுத்துக் கொள்ளுங்கள்.
டா. .வே. சா அவர்கள் தாம் கண்டெடுத்த ஒரு சுவடியில்
அறநிலைஎன்று தலைப்பிட்டிருந்தது என்கிறார்.
அதனால்பொருள் நிலை என்ற தலைப்பிலும்
புறநானூற்றுப் பாடல்கள் தொகுக்கப்ப்ட்டிருக்க வேண்டும் என்கிறார்




அவை நமக்குக் கிடைக்கவில்லை.
இப்படி எத்தனை நூல்கள் கிடைக்கவில்லையோ தெரியாது.
ஆனால் கிடைத்த எல்லா நூல்களிலும்
இந்து சமயக் கருத்தே இண்டு இடுக்கு இல்லாமல் பரவிக் கிடக்கிறது.


உதாரணமாக, தொல்காப்பியம் சொல்லும் 
கற்பியல் சூத்திரங்களைப் பாருங்கள்.

காமஞ் சான்ற கடைக்கோட் காலை
ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
1
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே.

(பொருளதிகாரம் 190, கற்பியல் 51)

இதில் தலைவனும், தலைவியும் நன்கு வாழ்ந்து,
வாழ்நாளின் கடைசிக்கே வந்த பிறகு,
என்ன நடக்கிறது என்கிறார் தொல்காப்பியர்.

இதற்குப் பொருள் சொல்லும் போது,
சிறந்தது அறம்பொருள் இன்பத்திற்
சிறந்த வீட்டின்பம். சான்ற காமம் என்றார்,
 நுகர்ச்சியெல்லாம் முடிந்தமை தோன்ற.
ஏமஞ்சான்றவாவன வானப்பிரத்தமும் சந்நியாசமும்.”
 என்கிறார் நச்சினார்க்கினியர்.

இதன் பொருள்:-
லைவனும், தலைவியும்,
அறம் பொருள், இன்பத்தில் ஒன்றி வாழ வேண்டும்.
அப்படி வாழ்ந்து அன் பின்
வானபிரஸ்தமும், சந்நியாசமும் மேற்கொண்டு
வாழ வேண்டும்,
அப்பொழுதுதான் எல்லாவற்றைக் காட்டிலும்
சிறந்த  வீட்டின்பம் (மோக்ஷம்)  
இறந்த பின் கிடைக்கும்.


வேதக் கருத்தான இதுவே,
தமிழரது கற்பியல் வாழக்கைக்கும் சொல்லப்பட்டுள்ளதே,
இந்த வாழ்க்கை, எப்படி திணிக்கப்பட்டதாக இருக்க முடியும்?


இந்தக் கற்பியல் சூத்திரம் எல்லோருக்கும் பொதுவானது
என்பது கவனிக்கத்தக்கது.
இது பார்ப்பனருக்கென்றோ,
வேதம் ஓதுபவர்களுக்கென்றோ,
தொல்காப்பியம் சொல்லவில்லை.
கணவன் – மனைவியாக வாழும் எவருமே
இந்த 4 புருஷார்த்தங்களைக்
கடைபிடிக்க வேண்டும் என்கிறது.
இதில் வர்ண வித்தியாசம் இல்லை.
இது தமிழ் மக்கள் வாழ்வியல் என்றும் சொல்கிறது.


பாரதம் முழுவதும் இருந்த மக்கள்,
ஒரே மூலத்திலிருந்து வந்திருந்தால்தான்,
ஒரே கலாசாரத்தை,
ஒரேவிதமான வாழ்க்கையை வாழ்ந்திருக்க முடியும்.

மனித மொழி என்பது
பாரதம் முழுவதும் பொதுவாக இருந்தது என்று பார்த்தோம்.
அப்படியே
வாழும் இயல்பும் ஒரே மாதிரியாக இருந்திருக்கிறது.

மாமூலனார் போன்றவர்கள்
திருக்குறள் தேவனாரது இந்து மதச் சார்புக்கு சர்டிஃபிகேட் கொடுத்தாலும்,
நம் திராவிடவாதிகள் கேட்க மாட்டார்கள்.
திருக்குறள் தேவனார் சமணர் என்பார்கள்,
அல்லது கிருஸ்துவர் என்பார்கள்.

அதையும் மீறி அவர் பெயரில் ஆண்டுகள்
ஆரம்பிக்க வேண்டும் என்கிறார்கள்.
ஒரு அறிவனாக இருந்து,
ஊழ்வினையின் செயல்பாட்டை நன்கு உணர்ந்து கொண்ட
திருக்குறள் தேவனாருக்கு,
மண்ணும், விண்ணும், கோளும், நாளும்
இன்னும் பலவும்
மக்கள் வாழ்வுடன் எவ்விதத்தில் இயங்குகின்றன
என்ற அறிவு அதிகமாகவே இருந்திருக்கும்.

அதன்படி அமையும் வருடப் பிறப்பும்
அவர் அறிவார்.
அதை மாற்றும் அதிகாரம்
இயற்கைக்கே கிடையாது.
இயற்கையே மாறுபட்டால்தான் அதில் மாற்றம் நிகழும்.

அப்படியிருக்க,
அவர் பெயரில் இப்படி ஒரு வருடக் கணக்கை ஆரம்பித்ததற்கு
அவர் மனம் ஒப்புக் கொள்ளுமா?

ஆனால் அவர் கவலைப்பட மாட்டார்.
அவரது ‘அதிகாரம்’ திராவிடவாதிகளிடம் செல்லாது
என்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது.

அதனால்தான்
அறத்தின் பயன் ஊழ்வலியால் மாறுபாடு அடையும் என்பதால்
ஊழ் என்னும் அதிகாரத்தை அறத்துப்பாலின் இறுதியில் வைத்தார்.

பொருளின் பயன், கயமையால் அழியும் என்பதால்,
கயமை என்னும் அதிகாரத்தை,
பொருட்பாலின் இறுதியில் வைத்தார்.

தேவனான திருக்குறள் தேவனார் அது மட்டுமா செய்தார்?

“தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்”

என்று
தேவரும் கயவரும் ஒப்பர்.
தேவரைப் போல
தாம் விரும்புவதைச் செய்து,
மனம் போன போக்கில் நடப்பதால்
தேவரும், கயவரும் ஒரு தன்மையவர் ஆவர்
என்றும் சொல்லி விட்டார்.

அதைத்தான் திராவிடவாதிகள் செய்து கொண்டிருக்கிறார்கள்!!
திருக்குறள் தேவனாரை உயர்த்திப் பிடிப்பதாகக் கூறிக் கொண்டு
மேற் கூறிய குறள் வாயிலாக
அவரோடு ஒப்பீடு செய்யும் வண்ணம் இருக்கிறார்கள்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக